நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது. அந்த இடத்தில் இருந்து பிளாஷ்பேக் தொடங்குகிறது. ஸ்ரீரங்கத்தில் அன்னபூரணியின் வயது வாழ்க்கை, அவருடைய குடும்பத்தை காண்பிக்கிறார்கள்.
நயன்தாராவுக்கு இயற்கையாகவே சமையல் திறன் இருக்கிறது. அன்னபூரணியின் அப்பா பொறியியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும், சாமிக்கு சேவை செய்ய வேண்டும் என்று, மடப்பள்ளியில் பிரசாதம் தயார் செய்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் சமையல் கலைஞரைப் பற்றி கூறிய பிறகு, சத்யராஜ் போன்று சிறந்த சமையல் கலைஞராக வர வேண்டும் என்று இலக்கை நிர்ணயிக்கிறார் நயன்தாரா.
ஜெய், ஒரு இஸ்லாமிய வீட்டுப் பையன். சிறு வயதில் இருந்தே நயன்தாரா உடன் இருந்து, அவரை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இப்படி ஒரு பெரிய கனவோடு இருக்கும் அன்னபூரணி, அவரது அப்பாவின் விருப்பத்துக்கு மாறாக சமையல் கலைஞர் ஆகிறாரா, அந்த துறையில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது படத்தின் மீதிக்கதை.
இதுவரை பெண்களை மையப்படுத்தி நயன்தாரா நடித்து வந்த ஹாரர் மற்றும் த்ரில்லர் படங்களில் இருந்து விலகி, அன்னபூரணியில் நயன்தாராவைப் பார்ப்பது ஒரு புதுவிதமாக இருக்கிறது. நயன்தாரா, நீண்ட நாட்களுக்கு பிறகு, தனது நடிப்புக்கு தீனி போடும் அளவிலான ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இடைவேளை, கிளைமாக்ஸ் ஆகிய காட்சிகளில் அவரது நிலைமையை எண்ணி நாம் வருந்துகிறோம்.
பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. தமனின் பின்னணி இசை, கதையின் ஊடே நம்மை கொண்டு செல்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. சத்யன் சூரியனின் காட்சிகள் அனைத்தும் அழகாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் ஆகியவை சிறப்பாக செய்திருந்தார்கள்.
சத்யராஜ், ராஜா ராணி படத்தில் வந்தது போல, ஒரு நல்ல கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். சத்யராஜ்-க்கு ஒரு அமைதிப்படை காட்சி, ஜெய்க்கு ராஜா ராணி காட்சி என சில சர்ப்ரைஸ் சம்பவங்களும் படத்தில் ஒளிந்துள்ளன. ஜெய் மற்றும் அவரது நண்பர்கள் குழுவிற்கு, நயன்தாராவுக்கு ஊக்கம் அளித்து, அவரை வெற்றி பெற வைப்பது மட்டுமே ஒரே நோக்கமாக இருக்கிறது.
கமர்ஷியல் படங்களில் ஹீரோக்கு உதவி செய்துவிட்டு, கதாநாயகி ஹீரோ உடன் சுற்றுவார். அவ்வாறு இந்த படத்தில் ஜெய்-நயன்தாரா கதாபாத்திர மாற்றுதலைக் கொடுத்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர், தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
வில்லன் என, எங்கு இருந்தோ கார்ப்பரேட் வில்லனை வைக்காமல், நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் ஒருவரை வில்லனாக வைப்பது நன்றாக அமைந்திருந்தது. அன்னபூரணிக்கு உடல்நலக்குறைவு, குடும்ப பிரச்னை என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அதனால், சில துறைகளில் பெண்கள் கால் வைப்பதே பெரிய சாதனை என்ற படியில் படம் செல்வது, கதையின் முக்கிய நகர்வைக் கொடுக்கிறது.
இல்லையென்றால், முன்னேறத் துடிக்கும் கீர்த்தி சுரேஷை, ஜெகபதி பாபு தடுப்பது போன்று, அரைத்த மாவையே அரைப்பது போன்று இருந்திருக்கும். இந்து-முஸ்லிம் இணைப்பை வைத்து, கடவுளே சாதி, மதமெல்லாம் பார்ப்பது இல்லை என துலுக்க நாச்சியாராய் மேற்கோள் காட்டியது நன்றாக இருந்தது.
படத்தின் கரு மிகவும் முக்கியமானது. அதிலும், அதனை கமர்ஷியலாக மாற்றி படமாக கொடுத்ததில் இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா ஜெயித்திருக்கிறார். படத்தின் உருவாக்கத்தைப் பார்க்கும்போது, இது அவரது முதல் படம் போலவே தெரியவில்லை, அதற்காக Movie Buddie-இன் வாழ்த்துகள்.
இயக்குநர் நீலேஷ், 2.O படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அட்லீ போன்றே ஷங்கர் பட்டறையில் இருந்து வந்து, நயன்தாராவை வைத்தே தனது முதல் படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பகுதியில், சிறுவயது வாழ்க்கையை பொறுமையாக காண்பிப்பார்கள். இடைவேளை காட்சி நன்றாக உள்ளது.
படத்தின் இரண்டாம் பகுதியில் சமையல் கலை போட்டியில் சென்று, ஒரு முழுமையான கிளைமாக்ஸ் காட்சி உடன் படம் முடிவடைகிறது. ஏதாவது தவறு செய்துவிட்டு, படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படம் என கூறும் காலத்தில், குடும்ப ரசிகர்களுக்காகவே செதுக்கப்பட்ட படம்தான், இந்த அன்னபூரணி.
படம் முழுவதிலும் உணவு காண்பிக்கப்படுகிறது. வசனம் அருமையாக உள்ளது. அதிலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், பிரியாணிக்கு ஏது மதம் எனக் கூறி, அது ஒரு உணர்வு என்று பிரியாணியை வைத்து சகோதரத்துவத்தை இயக்குநர் புரிய வைத்திருக்கிறார்.
அனிமேஷன் கேர்ள் மவுண்டெய்ன் கதை நன்றாக இருந்தது. கலாச்சாரம், குடும்பம் என ஒரு முழுமையான திரைப்படைப்பாக வெளி வந்திருக்கிறது. அன்னபூரணி ஒரு சராசரிக்கு மேலான ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். அதிலும், பெண்களுக்கு அன்னபூரணி மிகவும் நெருக்கமானதாக அமையும்.
ஒரு பிராமணப் பெண், சமையல் கலைஞராக ஆவது மட்டுமே இருந்திருந்தால், இந்த படத்தைப் பற்றி இவ்வளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், சமூகத்தில் இருக்கும் தடைகளை எல்லாம் உடைத்து, தனது கனவை அடைவதற்கு இடையில் குடும்ப சூழ்நிலை, சமூக எதிர்பார்ப்புகள் என நிறைய விஷயங்களைப் பற்றி படம் பேசுகிறது.
உணர்வுகளை வெளிப்படுத்தினாலே படம் கிரிஞ் எனக் கூறும் இளைஞர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்குமே படம் பிடித்தமானதாக அமையும். அதிலும், உங்கள் வீட்டில் உள்ள சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தியேட்டருக்கு அழைத்துச் சென்றால், அனைவரும் அன்னபூரணியை கொண்டாடுவார்கள். முக்கியமாக, அப்பாக்களின் செல்ல மகள்களுக்கு இப்படம் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
Share this Post
80s Build up movie review
1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...
Read MoreAnnapoorani Movie Review
நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....
Read MoreParking Movie review
ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...
Read MoreSivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)
சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...
Read MoreReady for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together