மாமன்னன் திரைப்படம் ஓடிடி (Netflix) தளத்தில் வெளியானதில் இருந்தே வடிவேலு, உதயநிதியை விட்டு விட்டு, அனைவரும் பகத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர். ‘திருப்பாச்சி அருவாள..’, ‘வாரான் வாரான் வாரான்லே..’, ‘திருநெல்வேலி அல்வாடா..’, ‘ஆகாயம் போதாத பறவை ஒன்று..’ இப்படி எந்த பாடலைக் கொண்டு எடிட் செய்தாலும், அதில் பகத் பாசில் பக்காவாக செட் ஆகிவிடுகிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜ், அனைவரும் ஒன்றை வெறுக்க வேண்டும் என்று ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தால், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு அனைவரும் பகத் பாசிலின் கதாபாத்திரத்தை கொண்டாட துவங்கி விட்டனர்.
இதற்கு முன்பும், தனி ஒருவன் (அரவிந்த்சாமி) மற்றும் மாஸ்டர் (விஜய்சேதுபதி) ஆகிய கதாபாத்திரங்களும் இப்படித்தான் கொண்டாடப்பட்டது. தரமான நடிகர்களை வில்லனாக மாற்றி படத்தை எடுக்கும்போது, ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தை வெறுக்காமல், அவர்களை மாஸான தோற்றத்தில் பார்த்து கொண்டாடுவதே உண்மை.
இதனால், ஒரு படைப்பாளர் கூற வந்த மொத்த கதையும் மாறுகிறது. குறிப்பாக, படத்தில் பகத் பாசிலைப் பார்த்து, ‘இவருக்கு என்னடா கண், புருவம் என்று எல்லாமே நடிக்குது’ என்று ரத்னவேலை பிடித்துப்போய், அதனை ரசிகர்களின் பேவரைட் கதாபாத்திரங்களில் ஒன்றாக மாற்றி விட்டனர்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தை வைத்து எப்போது முதன்மை படத்தை எடுக்கப் போகிறீர்கள் என மாரி செல்வராஜ் பக்கமும் ரசிகர்களின் பார்வை திரும்பி உள்ளது. நெட்பிளிக்ஸ்-இல் மாமன்னன் நம்பர் ஒன் என டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதில் பகத் பாசிலின் கதாபாத்திரம் ஒரு அராஜகம் பொருந்தியதாக கருதப்பட்டதாலும், ‘என்னப் பார்த்த மாதிரியே இருக்கே’ என தென் தமிழகப் பகுதிகளில் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. ‘தேவர் மகன்’ படம் போல அல்லாமல், மாற்று அரசியலைப் பேச வேண்டும் என எடுத்த படம்தான் மாமன்னன்.
ஆனால், இங்கு சக்திவேலை விட ரத்னவேலுவை அதிகமாகக் கொண்டாடுகிறார்கள். அதிலும், சாதிப் பாடல்களைப் போட்டு சிலர் வைப் செய்து வருகின்றனர். மொத்தமாக, எவ்வாறு மாரி செல்வராஜின் நோக்கம் இது இல்லையோ, அதேபோல்தான் கமலின் நோக்கமும் சாதியவாதம் அல்ல.
இதன் மூலம் ஒரு இயக்குநர் எந்த நோக்கத்திற்காக படம் எடுத்தாலும், அதனை ரசிகர்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கின்றனர் என்பதை யாராலும் மாற்ற முடியாது என்பது தற்போது மாரி செல்வராஜுக்கு புரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.