ஜெயிலர் விமர்சனம்
சிலைக்கடத்தல் கும்பல் ஒன்று முருகன் சிலையைத் திருடி விடுகிறது. இந்த சிலைத்திருட்டு நெட்வொர்க்கின் தலைவனாக விநாயகன் இருக்கிறார். இது தொடர்பான விசாரணையை போலீஸ் அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி மிகவும் நேர்மையாக விசாரித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் ரஜினி அறிமுகம் ஆகிறார்.
ஓய்வு பெற்ற ரஜினி, தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த ஒரு சூழலில் வசந்த் ரவி காணமால் போய்விடுகிறார். அது மட்டுமல்லாமல், அவர் இறந்துவிட்டார் என்றும் காவல் துறையால் அறிவிக்கப்படுகிறது.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ரஜினி, தனது மகனுக்கு என்ன நேர்ந்தது என தேடத் தொடங்குகிறார். இதனையடுத்து ரஜினி செல்கிற தேடுதல் பயணம், அதனை தனது குடும்பத்துக்கு தெரியாமல் செய்கிற நாடகம்தான் படத்தின் மீதக்கதை.
படம் தொடங்கி, அனைத்து கதாபாத்திரங்களையும் பொறுமையாக அறிமுகப்படுத்தி, படம் தொடங்கிய இருபது நிமிடத்திற்குள் படத்தின் கதைக்குள் சென்று விடுகிறார்கள். படத்தின் தொடக்கத்தில் இருந்தே எந்த வித ஆரவாரமும் இல்லாமல் படம் தொடங்குகிறது. ஏன், ரஜினியின் அறிமுகம்கூட எளிமையாகவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துவிட்டு, யோகிபாபு உடன் ரஜினி கர்நாடகா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு சிவராஜ் குமாரைக் காண்கிறார், ரஜினி. இதனையடுத்து, மீண்டும் தனது குடும்பத்திடம் வந்து என்ன நடந்தது என்பதை கூறும்போது, ஒரு மரண மாஸான இடைவேளைப் பகுதி அமைந்திருக்கிறது.
படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் எடுத்துக்காட்டு காட்சியில், ஜாக்கி ஷெராப் வருகிறார். கதை கிரீடம் திரில்லர் மிஷனுக்கு செல்கிறது. இங்குதான் சுனில், தமன்னா என வருகின்றனர். இதனையடுத்து, படத்தின் இறுதிக்காட்சி வடிவமைப்பு ஒரு மாஸான காட்சியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில், படத்தின் முதல் பாதியில் வரும் இருபது நிமிட குடும்பக் காட்சிகளும், இரண்டாவது பாதியில் வரும் சுனில் காட்சிகளும், குடும்ப ரசிகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த இரண்டு இடங்களிலும் படம் சற்று தொய்வை உண்டாக்குகிறது. மற்றபடி, படம் சரவெடியாக அமைந்துள்ளது.
இந்த பகுதிகளை மட்டும் குறைத்து எடுத்திருந்தால், இளைய சமுதாயத்திற்கு மட்டும் பிடிக்கும்படியான படமாக ஜெயிலர் அமைந்திருக்கும். ஆனால், இந்த காட்சிகளுடன் ரசிகர்கள் காணும்போது, இது ரஜினியின் பக்கா திரைப்படமாக இருக்கும்.
ரஜினி ஒவ்வொரு முறையும், பாட்ஷா, படையப்பா, சிவாஜி, எந்திரன் என அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருந்ததனால் மட்டுமே, அவர் தலைமுறைகள் கடந்தும் சினிமாவை கட்டி ஆண்டு கொண்டிருக்கிறார்.
எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு, குடும்ப ரசிகர்கள் கொண்டாடும்படியான படமாக ரஜினி படம் வரவில்லை. இதில் பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கானது என்பதால், அது மட்டும் விதிவிலக்கு. இப்படி இருந்த ரஜினியை, நெல்சன் தனது பாணியில் உருவாக்கி, அதில் ரஜினியை அமர்த்தியது, நெல்சன் எப்படிப்பட்ட திரை வடிவமைப்பாளர் என்பதைக் காட்டுகிறது.
காமெடி, சென்டிமென்ட் ஆகியவை பெரிதாக பலன் அளிக்கவில்லை. ஏனென்றால், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படம் எடுக்கலாம். ஆனால், ரஜினியை வைத்து அப்படி படம் எடுத்தால், அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, முழுவதுமான ரஜினிஸ்ஸமை வைத்து நெல்சன் படம் எடுத்திருக்கிறார்.
ஒரு தந்தையாகவும், தாத்தாவாகவும், ஜெயிலராகவும் ரஜினி திரைப்படத்தில் புகுந்து விளையாடி உள்ளார். தனது திறமை, ரஜினிக்கான தனி லுக் என படம் முழுவதுமே ரஜினியின் தனித்தன்மை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக, விநாயகன் மற்றும் ஜாக்கி ஷெராப் போனில் பேசும்போது ரஜினி வரும் காட்சிக்கு ஈடு இணையே கிடையாது. ரஜினிக்கான சிகரெட் பற்ற வைப்பது, அதே காட்சியில் மோகன்லால், சிவராஜ் குமார் வருவது எல்லாம் அல்ட்ரா மாஸாக அமைந்துள்ளது.
மோகன்லாலின் அறிமுக காட்சியை இன்னும் பதப்படுத்தி எழுதி இருக்கலாம். ஆனால், கிளைமாக்ஸில் லாரியை வைத்து மோகன்லால் மாஸ் செய்திருக்கிறார். மோகன்லாலின் காஸ்டியூம் அருமை. சிவராஜ் குமாருக்கான திரைப்பங்களிப்பு ரஜினிக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது.
ரஜினியும், அனிருத்தும் மட்டுமே படத்தை தாங்கிப் பிடித்துள்ளனர். அனிருத் அவரது பங்கிற்கு மாஸ் செய்திருக்கிறார். ஜெயிலர் பிளாஷ்பேக் காட்சிகள் மரண மாஸாக அமைந்திருந்தது. ஆனால், அதனை இன்னும் செதுக்கி இருக்கலாம்.
வசந்த் ரவி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிருணா ஆகியோருக்கு பெரிதாக திரைப்பங்களிப்பு இல்லை. ரித்விக் நல்ல கதாபாத்திரத்தின் பங்களிப்பை அளித்திருக்கிறார். யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு கைத்தட்டல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
ரஜினி – யோகி பாபு காம்போ சரியாக வேலை செய்துள்ளது. விடிவி கணேஷ், ரெட்டின் கிங்க்ஸ்லி மற்றும் சுனில் ஆகியோரின் நகைச்சுவை எடுபடவில்லை. தமன்னா ஒரு சிறப்புக் கதாபாத்திரமாக ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார்கள் என சொல்லி இருக்கலாம். ஏனென்றால், தமன்னவுக்கான தனி இடம் படத்திற்கு தேவை இல்லாதது.
ஒளிப்பதிவு படத்தின் கூடுதல் பலம். ரஜினிக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் அமையாவிட்டாலே, அப்படம் ரசிக்கப்படாது. ஆனால், இதில் விநாயகன் ஒரு மிரட்டலான வில்லனாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். எந்தவொரு கதாபாத்திரத்தையும் வீணாக்காமல், அனைத்து கேமியோக்களையும் சரியாகப் பயன்படுத்தி தியேட்டரில் ஒரு பக்கா மாஸ் படமாக அமைந்துள்ளது.
படத்தின் கதை பழையதாக இருந்தாலும், அதில் ரஜினியை வைத்து நெல்சன் திருப்திகரமான படத்தை அளித்திருகிறார். ஜெயிலர் படத்தை குடும்பமாக ரசிக்கலாம் இருப்பினும், வன்முறை மற்றும் ரத்தக் காட்சிகள் அதிகமாக இருப்பதால், குழந்தையுடன் படம் பார்ப்பவர்கள் கவனத்துடன் ரசிக்கலாம்.
படத்தில் சின்ன சின்ன குறைகள் அப்பட்டமாக தெரிந்தாலும், ரஜினி அதனை மறைக்கடித்து ஜெயிலரை ஜெயிக்க வைத்திருக்கிறார். எனவேதான், இப்படி ஒரு திருப்திகரமான ரஜினி படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது சின்ன சின்னக் குறைகள் கண்களுக்கு தெரிவதில்லை.
மொத்தத்தில் விமர்சன் ரீதியாக படத்தைப் பார்க்கும்போது ஆவரேஜாக இருந்தாலும், அதில் ரஜினி – அனிருத்தை வைத்து நெல்சன் சம்பவம் செய்திருக்கிறார். ஜெயிலரை தியேட்டரில் பார்த்தால் உண்மையால் உங்களை பூர்த்தி செய்துவிடும். இது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவமாகவே இருக்கிறது.
ரஜினிக்கு 72 வயதானாலும், நாம் இன்னும் ரஜினியின் காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி. எனவே, கண்டிப்பாக ஜெயிலரை தியேட்டரில் பாருங்கள். அலப்பறை கெளப்புறோம்.. தலைவர் நிரந்தரம்..!
Share this Post
80s Build up movie review
1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...
Read MoreAnnapoorani Movie Review
நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....
Read MoreParking Movie review
ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...
Read MoreSivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)
சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...
Read MoreReady for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together