1975-இல் செல்வராகவன் ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடிக்கிறார். இந்த மெஷின் மூலம் கடந்த காலத்துடன் மட்டுமே பேச முடியும். ஆனால், எதிர்காலத்துடன் பேச முடியாது. இதனைப் பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகளும் உள்ளன. இந்த நேரத்தில், டைம் மெஷினைக் கண்டுபிடித்த செல்வராகவன், அதனைக் கொண்டாடுவதற்கு பார் ஒன்றிற்கு செல்கிறார். அப்போது நடக்கும் சம்பவத்தினால், செல்வராகவனின் கையை விட்டு டைம் மெஷின் சென்று விடுகிறது.
இதனையடுத்து கார்த்தியின் (நடிகர் கார்த்தி) வாய்ஸ் ஓவரில், மார்க் ஆண்டனியின் உலகம் என்ன என்பது பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விஷால் – எஸ்.ஜே.சூர்யா இருவரும் நண்பர்கள். இவர்களைப் போலவே, இவர்களது பிள்ளைகளும் ஒன்றாகவே வளர்கிறார்கள். இவ்வாறான சூழலில், மகன் விஷாலிடம் இந்த டைம் மெஷின் கிடைக்கிறது. எனவே, இந்த டைம் மெஷினின் உதவியோடு விஷால், கடந்த காலத்துக்கு ஒரு கால் செய்கிறார். இதன் காரணமாக, விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்க்கை மொத்தமாக மாறி விடுகிறது.
இவ்வாறு செல்கின்ற கதையில் என்ன ஆகிறது, அப்பாக்களும், பிள்ளைகளும் இப்படியெல்லாம் செய்வதற்கு காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை. பொதுவாகவே, டைம் மெஷினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில், டைம் மெஷினைப் பயன்படுத்தும் நபர்கள் கடந்த காலத்துக்குச் செல்வார்கள். ஆனால், இந்த படத்தில் கால் (Phone call) மட்டுமே செல்கிறது. டைம் மெஷினைப் பயன்படுத்தி கால் செய்யும் காட்சிகள் திரை ரசிகர்களுக்கு நன்றாக அமைந்துள்ளது.
படத்தின் முதல் பாதி சுமாராக இருந்தாலும், படத்தின் இடைவேளை மற்றும் இடைவேளைக்குப் பிறகான இரண்டாம் பகுதி சிறப்பாக செல்கிறது. அதிலும், இடைவேளைக்குப் பிறகு, மொத்த படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தனதாக்கிக் கொள்கிறார். குறிப்பாக, சில்க் ஸ்மிதா காட்சிகளிலும், எஸ்.ஜே.சூர்யாவே நாயகனாகி ரசிகர்களின் கைதட்டலைப் பெறுகிறார். மேலும், அப்பாவும், மகனும் தொலைபேசியில் பேசும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. எனவே, எஸ்.ஜே.சூர்யா பேயாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது தெரிகிறது.
இதன் காரணமாக, இந்தப் படத்தை எஸ்.ஜே.சூர்யாவின் படமாகத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ‘இரும்புத்திரை’ படத்திற்குப் பிறகு விஷாலுக்கு இந்தப் படம் ஒரு நல்ல படமாக அமைந்து இருக்கிறது. இருப்பினும், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஒரே நேரத்தில் வரும் காட்சிகளில், விஷாலை எஸ்.ஜே.சூர்யா முந்தி விடுகிறார். இதற்காகவே, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ‘நடிப்பு அரக்கன்’ என டைட்டில் கார்டில் பெயர் போட்டிருக்கிறார்கள். இதநை நிரூபிக்கும் வகையில்தான், தனது நடிப்பு மற்றும் நடனத்தில் எஸ்.ஜே.சூர்யா படம் முழுவதும் மிரட்டி இருக்கிறார்.
செல்வராகவன் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு, படத்தினைத் தொடங்கி வைக்கிறார். சுனிலுக்கு ‘பஞ்சுமிட்டாய்’ என்ற பாடலுக்கு ஏற்றார்போல ஒரு தரமான காட்சியும் உள்ளது. படத்தின் நாயகி ரித்து வர்மா, தனது கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், கிங்க்ஸ்லி ஆகியோர் ரசிகர்களை பெரிதும் சிரிக்க வைக்கவில்லை. தளபதி விஜய்க்கு நன்றி என்ற கார்டுடன் தொடங்கும் இப்படத்தில், வாலி, அமராவதி, விடாமுயற்சி என அஜித்குமாரின் தடங்களும் ஆங்காங்கே பதிக்கப்பட்டு உள்ளன
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ். ரீமிக்ஸ் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாக உள்ளது. ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற பாடல்கள் பெரிதும் ரசிகர்களைக் கவரவில்லை. டிரம்பட், கிட்டார் வைத்து போடப்பட்டிருக்கும் இசையானது, அந்த வைபை நம்முள் கடத்துகிறது. இதனாலேயே, தியேட்டர்களில் சக்கை போடு போடும் மார்க் ஆண்டனி, ஓடிடி தளத்தில் பெரிதாக எடுபடாது. லைட்டிங், ஒளிப்பதிவு ஆகியவை சிறப்பாக உள்ளது.
படத்தொகுப்பு, படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறது. ஆடை வடிவமைப்பும், படத்தின் காலத்திற்கு ஏற்றார்போல ‘பளிச்’ நிறங்களிலே கொடுத்திருக்கிறார்கள். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரிடம் தரமான வேலையை வாங்கிய இயக்குநரும், தனது வேலையை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். இந்தப் படம் விஷாலுக்கு மட்டும் ஒரு திருப்பு முனையாக இல்லாமல், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) மற்றும் பஹீரா ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது.
பெண்களை திட்டுவது, அவர்களை தவறாகப் பயன்படுத்துவது என்ற ஆதிக்கின் பார்முலாவையே மார்க் ஆண்டனி மாற்றி இருக்கிறது. எனவே, மார்க் ஆண்டனிதான் ஆதிக் ரவிச்சந்திரனின் படங்களிலேயே சிறந்த படமாக அமைந்து விட்டது. கதை சொல்லும் முறை, கதாபாத்திரத் தேர்வு, நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்துமே கச்சிதமாக அமைந்துள்ளது.
எழுத்தில் அதிகமாக கவனம் செலுத்தி இருப்பது, படம் பார்க்கும்போதே தெரிகிறது. இரண்டு நண்பர்களுக்கு இடையிலான ஒரு பழிவாங்கும் கதையில், சென்டிமென்ட்டும் உள்ளது. ஆனால், அந்த கதையை திரைக்கதையாக்கிய விதம், ரசிகர்களுக்கு பக்கா எண்டர்டெயின்மென்ட்டை அளிக்கிறது. பொதுவான ஒரு ரசிகர் எதனை எல்லாம் விரும்புவார்களோ, அவை அனைத்தையும் பேக் செய்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சமாக படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஏனென்றால், படம் முழுவதும் தொய்வின்றி செல்வதற்கு ஏற்ற திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ காட்சிகளோடு ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சத்தோடு இப்படம் அமைந்துள்ளது. அதிலும், அதிகமான 90ஸ் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விஷாலுக்கு அனகோண்டா உதாரணம் படத்தின் இரு இடங்களில் உள்ளது. படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு படத்தின் டிரைலர்தான் காரணம்.
எனவே, டிரைலரில் எதிர்பார்க்க வைத்த அனைத்தும் படத்திலும் உள்ளது. அதிலும், இது என்ன வகையினாலான படம் என்று கண்டறிய முடியாத அளவிற்கு, படம் முழுவதும் மசாலாவாக உள்ளது. இப்படம் நவீனமாக இருந்தாலும், கடந்த தலைமுறைக்கும், புதிய தலைமுறைக்கும் ஏற்றார்போல இதன் கலவையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில், மார்க் ஆண்டனி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்.
இதனிடையே, படத்தில் குறைகள் இல்லையா எனக் கேட்டால், குறைகள் இருந்தாலும் அதனை படம் முடியும் வரை, அது ரசிகர்களுக்கு தெரியாதபடி கொண்டு செல்வதுதான் முக்கியம். அதனை மார்க் ஆண்டனி நிறைவு செய்திருக்கிறது.
Share this Post
80s Build up movie review
1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...
Read MoreAnnapoorani Movie Review
நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....
Read MoreParking Movie review
ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...
Read MoreSivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)
சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...
Read MoreReady for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together