Movie Buddie

ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ் வீட்டில் எம்.எஸ்.பாஸ்கர் பத்து வருடமாக குடியிருக்கிறார். வந்த புதிதில், இருவரும் வீட்டிற்கு வந்து போகும் அளவிற்கு நண்பர்கள் ஆகிறார்கள். இந்த நிலையில், இந்துஜா கர்ப்பமாக இருப்பதால், அவரை அழைத்துச் செல்வதற்காக ஹரீஷ் கல்யாண் ஒரு கார் வாங்குகிறார்.

இந்த கார் வந்த பிறகே மோதல் தொடங்குகிறது. ஹரீஷ் கல்யாண் எப்படிப்பட்டவர், அவரது வேலை என்ன, இந்துஜாவை அவருக்கு எவ்வளவு பிடிக்கும் என தெரியப்படுத்தப்படுகிறது. அதேபோல், எம்.எஸ்.பாஸ்கர் எவ்வளவு சிக்கனமாக இருந்து, தனது மகளின் கல்யாணத்திற்கு எவ்வாறு பணம் சேர்க்கிறார் என்றும் வெளிப்படுத்தப்படுகிறது.

இப்படி ஒரு முழு அறிமுகத்தை கொடுத்த பிறகு, மோதலுக்கு உள்ளே செல்லும்போது படம் சுவாரஸ்யம் எடுக்கத் தொடங்குகிறது. ஹரீஸ் கல்யாண் கார் நிறுத்துவதனால் எம்.எஸ்.பாஸ்கரால் பைக்கை எடுக்க முடியவில்லை. இது பெரிய பிரச்னையாக மாறி, விஷயம் வீட்டு உரிமையாளரிடம் செல்கிறது.

வீட்டின் உரிமையாளரான இளவரசு, பைக் வைத்திருப்பவர்கள்தான் கார் வைத்திருப்பவர்களுக்கு ஒத்துழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்குமாறு சொல்லிவிட்டு செல்கிறார். இதனையே சிந்தித்துக் கொண்டே இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முழுத் தொகையையும் செலுத்தி புது கார் ஒன்றை வாங்கி, பார்க்கிங்கில் நிறுத்துகிறார்.

இவ்வாறு செல்லும் படத்தில், அந்த பார்க்கிங்கில் யாருடைய கார் விற்கிறது, எலியும், பூனையுமாக சண்டையிடும் எம்.எஸ்.பாஸ்கரும், ஹரீஷ் கல்யாணும் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஒரு தனி வீடு, அதில் என்ன படத்தை எடுக்க முடியும் என பார்த்தால், ஒரு த்ரில்லர் படம் போல படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் தனது நடிப்பில் மிரட்டி விட்டிருக்கிறார். இருவருக்கும் இடையிலான ஈகோதான் பிரச்னை படம் என்னும்போது, காட்சியின் ஓரத்தில் இருந்தாலும், எம்.எஸ்.பாஸ்கர் கவனிக்க வைக்கிறார்.

ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களுக்கும் இக்கால தலைமுறைக்கும் உள்ள இடைவெளி எப்படி உள்ளது என்பதையும் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக, வெகு நாட்கள் மரியாதையாக வாழும் பகுதியில், ஒரு சின்னப் பையனால் அசிங்கப்படுவது, எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று இருக்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர் கோபம், வன்மம் மற்றும் வெறுப்பு என அனைத்து விதமான உணர்வுகளிலும் தனது நடிப்பால் கவனிக்க வைக்கிறார். ஆனால், ஹரீஷ் கல்யாண் கோபப்படுகிறாரே தவிர, மற்ற உணர்வுகளில் எல்லாம் எம்.எஸ்.பாஸ்கர் முன்னால் கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறார். படத்தில் ஒருவர்தான் வில்லன் என நினைத்து விட முடியாது. ஏனென்றால், இருவருமே வில்லத்தனத்தில் ஈடுபட்டு கலவரம் செய்கிறார்கள்.

பார்வையாளர்களுக்கு இருவர் மீதும் கோபமும், இரக்கமும் வருகிறது. இந்துஜா, கர்ப்பமான பெண்ணாக ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எம்.எஸ்.பாஸ்கர் மனைவி மற்றும் மகளும் தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இசை ஆகியவை, ஒரு சாதாரண படத்தை கேட்&மவுஸ் படமாக மாற்றி இருக்கிறது. சாம் சி.எஸ்-இன் பாடல்கள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், பின்னணி இசை படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது. படத்தில் இருவருமே நல்லவர்கள்தான். ஆனால், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, பிழைப்பைக் கெடுக்கும் அளவிற்கு வில்லத்தனம் செய்கிறார்கள்.

ஆணாதிக்கம் என்ற பார்வையில் இருந்து மட்டுமே பிரச்னையை பார்ப்பது, அவர்களது குடும்பத்துப் பெண்களை பாதிக்கிறது. அதிலும், பார்க்கிங்கில் தங்களது காரை நிறுத்த வேண்டும் என்று, அலுவலகத்தில் இருந்து வேகமாக வருவது சிறந்த நகைச்சுவையாக இருக்கிறது. பிலோமின் ராஜ்-இன் படத்தொகுப்பு படத்தின் முக்கிய வெகுமதியாக உள்ளது.

ஏதேனும் ஒரு பகுதியை வைத்து, அடுத்த காட்சிக்கு அழைத்துச் செல்லும் நுட்பம், படம் பார்க்கும்போது வெகுவாக கவர்கிறது. படம் பார்த்தபிறகு, இப்படி எல்லாம் எளிதாக செய்திருக்கலாம் என தோன்றலாம். ஆனால், படத்தைப் பார்க்கும்போதே அதனை யோசிக்க விடாமல் செய்திருக்கிறார்கள்.

வீட்டுக்கு குடி வந்து கார் வாங்கியதில் இருந்து, படம் நல்ல பிணைப்புடன் செல்கிறது. திரைக்கதை நன்றாக அமைந்துள்ளது. இயக்குநர் ராம்குமாரின் முதல் திரைப்படமே நல்லபடியாக வந்துள்ளதற்கு, Movie Buddie-இன் வாழ்த்துகள்.

படத்தின் இறுதி பகுதி மட்டும் சற்று வேறு மாதிரி செய்திருந்தால், குறை இல்லாத சிறந்த படைப்பாக அமைந்திருக்கும். ஏனென்றால், சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் படம், திடீரென வேகம் குறைந்து ஒரு சுமாரான கிளைமாக்ஸ் உடன் முடிகிறது. ஒரு வீடு, அதில் நடப்பதுதான் முழுப்படமே.

கமர்ஷியலாக பாடல், சண்டை என இருந்தால்தான் படம் பார்ப்பேன் என்ற மனநிலையில் இருப்பவர்கள் சற்று யோசித்துக் கொள்ளுங்கள். அதேநேரம், தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவற விட்டிருந்தாலும், ஓடிடியில் வரும்போது தாராளமாக பார்க்கலாம்.

Share this Post

80s Build up movie review

1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...

Read More

Annapoorani Movie Review

நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....

Read More

Parking Movie review

ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...

Read More

Sivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)

சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...

Read More

Ready for non-stop movie excitement?

Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *